நடுத்தர வாழ்வென்பதே துன்பம். அதிலும் நல்ல புத்திசாலியும் இல்லாமல், அடி முட்டாளாகவும் இல்லாமல் பிறந்துவிட்ட நான் படும் பாடு.. அடடா.. பல தருணங்களில் சாதித்துவிட்டது மாதிரி தோன்றும்.. நிமிர்ந்து பார்த்து புளாங்கிதம் அடைந்தால் எல்லைக் கோடு இன்னும் சில அடி தூரத்திற்கு நகர்ந்து சென்றிருக்கும். சரி நமக்கு விதித்தது இவ்வளவுதான் என விலகினால் போட்டியாளர்களும் விலகிவிடுவார்கள்.. வெல்லவும் முடியாமல் தோல்வியை மெல்லவும் முடியாமல் ஒரு வாழ்க்கை..
பள்ளியில் கூட கற்பூரங்களின் முதல் பெஞ்சோ, மாப்பிள்ளைகளின் கடைசி பெஞ்சோ கிடையாது.. இவனைக் கேட்டால் எப்படியும் மாட்டிக் கொள்வான் என ஆசிரியர் அறிந்து வைத்திருக்கும் அரைகுறை நடு பெஞ்ச் மாணவனாகவே இருந்தேன், இந்த நடுநிலை வகிப்பதில் என்ன பிரச்சினை என்றால், நம்மை யாருக்குமே நினைவிருக்காது. இவன் நல்லா படிக்கிற பையனாச்சே.. இவன் தறுதலை, எப்போமே படிக்கமாட்டான் இப்படி எந்தப் பாராட்டுமே கிடைக்காது..
இதேதான் வாழ்க்கையின் தத்துவம் போலும். ஏழைக்கு எதை பற்றியும் கவலையில்லை, பணக்காரனுக்கு பணத்தைப் பாதுகாத்தாலே போதும். அந்தப் பணமே அவனை பாதுகாக்கும். நமக்கு அப்படியா 100 ரூபாய் வருமானமென்றால் 150 ரூபாய் செலவு. தப்பித்தவறி எங்கேனும் ஒரு பெருந்தொகை கிடைத்தால், எமனின் ஏஜெண்ட் எவனுக்காவது அலாரம் அடித்துவிடும். விபத்தோ, வியாதியோ, ஏதாவதொரு தண்டச் செலவில் அபகரித்துக் கொண்டுவிடுவார்கள்.
சரி இனி புத்திசாலியாகி என்ன, முட்டாளாகி என்ன.. பிழைக்கும் வழிதான் பிரதானம்.
ஆகவே நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், உழைக்காமல் ஏழையாகிவிடுங்கள். அல்லது இரவுபகல் பார்க்காமல் உழைத்து பணக்காரராகி விடுங்கள்.. நடுவில் நின்று நித்தம் செத்துப் பிழைக்கும் நடுத்தர வர்க்கமாகி நாசமாய் போகாதீர்கள்!
1 comment:
சூப்பரா எழுதியிருக்கீங்க பாஸ்..இந்தியாவுல பெரும்பாண்மையா இருக்கிற நடுத்தற மக்களோட நிலைமை இதுதான். உண்மையில் முன்ப விட நடுத்தற மக்கள் முன்னேறுவதற்கு ஏற்ற சூழல் இருக்கின்றது.அதற்கான் வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு வேளை நடுத்தற வர்க்கம் என்று ஒன்று இந்தியாவில் இல்லையென்றால் எத்தியோப்பியா, சோமாலியா நாடுகளை போன்று ஏழை நாடாக, தீவிரவாத இனக்குழுக்கள் அதிகமாக இருக்கும் நாடாக இந்தியா மாறி இருக்கும்.
ஆல்தெ பெஸ்ட்.. நிறைய எழுதுங்கள்.. :)
Post a Comment