இன்று, நாட்டில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் தன்மையை, மக்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதுதான் எனது ஐயம்!
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டமாகட்டும், முல்லைப் பெரியார் அணைக்கான போராட்டமாகட்டும், ஊழலுக்கு எதிரான போராட்டமாகட்டும், தங்களுடைய ”போராட்டம்” எத்தகைய விளைவை உண்டாக்கும், அதனால் என்னென்ன நன்மை, தீமைகள் விளையும் என்று யாருமே எண்ணிப் பார்ப்பதாகத் தோன்றவில்லை!
மக்களின் அறியாமை என்னவென்றால், தங்களுக்காக போராடுவதற்குத்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை மறந்து, தானே போராட களமிறங்குவதுதான். வேலைக்கு ஆள் வைத்த யாராவது, தானே வேலை செய்யப் புறப்படுவார்களா? நாம், நமக்காக நியமித்த வேலைக்காரர்களே, அரசியல்வாதிகள்! வேலைக்காரனுக்கே அடிமையாகிக் கிடக்கும் அவலம் இங்கே மட்டும்தான் அரங்கேறுகிறது!
தலைவனென்று ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, தலையையும் அவரிடத்தில் அடகு வைத்துவிட்டு, போராட களமிறங்கினால், ஆப்பசைத்த குரங்கின் நிலைதான் அனைத்து மக்களுக்கும்! ஆப்பை எடுத்துவிடலாம், ஆனால் வால் மாட்டிக் கொள்ளும்!
நாம் தேர்ந்தெடுத்த தலைவர்களின் திறமை, பதவியிலிருந்து அவர்களைத் திரும்பப் பெற , நமக்கு இருக்கும் அனைத்து வழிகளையும், நம் கண்ணில் இருந்து மறைத்து விடுவதுதான். அதற்கு அவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள் - பணம், தொண்டர்கள், தொண்டர்களுக்கும் மேலான குண்டர்கள்!
நமக்கேன் வம்பு என நாமும் அடங்கிவிடுகிறோம். நம்மைக் காக்க வேண்டிய காவல் துறையும் அவர்களின் வசம்.
அவர்களின் தயவு இல்லாமல் சொந்தக் குடும்பத்தைக் கூட காப்பாற்ற இயலாத நம்மால்,அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து, எப்படி சொந்த ஊரையோ, மாநிலத்தையோ, நாட்டையோ காப்பாற்ற இயலும்?
பல சமயங்களில், நமது போராட்டமே, நாம் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்கு எதிரானதுதான் என்பது கொடுமையிலும் கொடுமை.
இலவசத்துக்க ஆசைப்பட்டு, தலையை அடகுவைத்த நாம் எத்துனை துன்பங்கள் வந்தாலும் அனுபவிக்க வேண்டியதுதான்.
நாம் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
இதில் தற்கொலை செய்துகொள்ளும் புண்ணியவான்களின் தியாகம் இன்னும் அளப்பரியது. உயிரோடு இருந்து சாதிக்க முடியாததை, இறந்த பின் சாதிக்க முடியுமா என்ன? உணர்ச்சிக்கும் ஓர் அளவில்லையா!
சாலைமறியல் செய்யும் மக்கள், சாதிப்பது தம்மைப் போன்ற சாதாரண மக்களை அலைக்கழிப்பது மட்டுமே! என்றாவது தம் துன்பத்துக்கு காரணமான அரசியல்வாதிகள் செல்லும் பாதையில், சாலை மறியல் செய்ய இயலுமா இவர்களால்!?
தன்வினை தன்னைச் சுடும்! தனியாகப் போராடி சாதிக்க இயலாது! சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் களமிறக்காமல்!
வைத்திருக்கும் மிச்ச மீதியையும் இழப்பதற்கு முன்னால் விழித்துக் கொள்(ல்) மானிடா!